Monday 1 January 2018

தூய மரியா இறைவனின் தாய்

       
   அன்னை மரியா ஓர் அருளோவியம்; மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின் பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார்.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீன நாடு உரோமைப் பேரரசு ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அந்நாட்டைத் தாவீது அரசர் ஆண்டு வந்தார். அவருடைய வழி மரபில் எளியக் குடும்பத்தில் வாழ்ந்த சுவக்கீன்அன்னா என்ற தம்பதியருக்குக் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவமாசு அணுகாதவராய், சென்மப்பாவத்திற்கு உட்படாமல் மரியா, ‘அமல உற்பவியாகப்’ பிறந்தார். சுவக்கீன் என்றால், ‘இறைவன் தயார் செய்கின்றார்’ என்பது பொருள். அன்னா என்றால், ‘இறைவனது அருள்’ என்பது பொருள். மரியா என்றால், ‘வழிகாட்டும் விண்மீன்’ என்பது பொருள். 

       ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய்க்கு நிகர் தாயே. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர். இதையே கவிஞர் ஒருவர், “தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய வார்த்தைகளே இல்லை” என்கிறார். ஆம்! சாதாரண மனிதரை ஈன்ற தாயை வருணிக்கப் போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். இதையே புனித அகுஸ்தினார், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார். 

          அன்னை மரியா இறைவனின் தாய்; நம் ஒவ்வொருவரின் தாய். இதையே எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று உரைக்கிறார். மரியா ஆண்டவரின் தாய் என்றால், உண்மையிலேயே இறைவனின் தாய். கி.பி 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கம், “இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்; எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்; ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார்” என்று தெளிவாகக் கூறுகிறது. 

          நாம் அன்னை மரியா இறைவனின் தாய் என்றும், சிறப்பாக நம் ஒவ்வொருவரின் தாய் என்று ஏற்றுக்கொள்வோம். மரியா, கடவுள்மீது கொண்டுள்ளப் பேரன்பால் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். அதனால்தான் புனித ஜாண் பெர்க்மான்ஸ், “ஆ! மிகவும் இனிய மாமரியே! தங்களை அதிகமாக அன்பு செய்பவர் பேறுபெற்றவர். மரியாவை நான் அன்பு செய்தால், நிச்சயம் விண்ணகத்தில் உறுதியுடனிருப்பேன். கடவுளிடமிருந்து கேட்பவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வேன். நான் மாமரியை நேசிப்பேன்” என்று கூறினார். இறைவனின் தாயாக, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாக, மாசற்ற இரக்கத்தின் அரசியாக இருக்கின்ற அன்னை மரியாவை அதிகமாக அன்பு செய்வோம்.           

 

No comments:

Post a Comment