Sunday 22 July 2018

புனித மகதலா மரியா

   இயேசுவின்மீது மிகுந்த அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர். என் ஆண்டவரை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர் என்று கூறி கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தவர். உயிர்த்த இயேசுவை முதன் முதலில் கண்டவர். இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசியவர். ஆண்டவரை வாஞ்சையோடு தேடி அவரை கண்டடைந்தவரே புனித மகதலா மரியா. இவர்  கலிலேயாவில் கெனசரேத்துச் சமவெளியின் தெற்கு பகுதியில் மகதலா என்ற நகரில் பிறந்தவர். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். இயேசுவின் இறையாட்சி பணியில் மகதலா மரியா உடன் இருக்கிறார். கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர். 

மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் உடனிருந்தார். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பிறகு ஓய்வு நாள் முடிந்ததும் அவருடைய உடலில் நறுமணத் தைலம் பூச யாக்கோபின் தாய் மரியா மற்றும் சலோமி ஆகியோருடன் சென்றார்.   





   
                    
                                        

No comments:

Post a Comment