Tuesday 17 July 2018

புனித அலெக்சியார்

   அருள் வாழ்வின் தாகத்தால் இறைமகன் இயேசுவின் திருக்கரங்களில் தன்கரம் பற்றி, உலக இன்பத்திலிருந்து விடுபட்டுத் தவமுனிவராய், கற்பு நெறிக்குக் களங்கம் ஏற்படுத்தாமல் மாமனிதனாய் மாறிட சித்திரவதைகளைச் சிரிப்புடன் ஏற்று, எளிமைக்கு எழுச்சி தந்து புனிதராக வாழ்ந்தவரே புனித அலெக்சியார். உலகில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் உரோமை நகரில், செல்வச் செழிப்புமிக்க யுஃபேமியானுஸ் என்பவரின் மகனாக நான்காம் நூற்றாண்டில் பிறந்தார். அலெக்ஸியாரின் பெற்றோர் “மகனே! அலெக்ஸ் உனக்குத் திருமணம் முடிப்பதற்கு நிச்சயம் செய்துள்ளோம்” என்றனர். இதுகேட்ட அலெக்ஸ், “ பெற்றோரே! இவ்வுலகில் திருமணம் செய்து வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. மண்ணுலக ஆசைகளையெல்லாம் விட்டொழித்து, விண்ணுலகம் அடைவதற்கே விரும்புகிறேன். இவ்வுலக வாழ்வு ஒரு மாயை, நிலையில்லாதது, உடலும் அழிவுக்குரியது. மழைக்கால மின்னலைப் போல் நாம் காண்பதெல்லாம் ஒருநாள் அழிந்து போகும். இவ்வுலகில் நாம் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் நினையாத நேரத்தில் இறப்பு வந்தே தீரும். நாம் இறப்பது திண்ணம். வெயிலில் காய்ந்து வாடும் மலர்களைப் போல் இவ்வுலக வாழ்வும் நிலைகுலைந்துவிடும்” என்றார்.
  பெற்றோர் அழகும், நறóகுணமும் நிறைந்த பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவரும் பெற்றோரின் மன மகிழ்ச்சிக்காகத் திருமணம் செய்து கொண்டார்.மணவறைக்குச் சென்று மனைவியிடம் “தங்கையே! மறுத்து பேசாமல் நான் சொல்வதைக் கவனமுடன் கேள். மாணிக்கமே! தேனமுதே! இவ்வுலகம் நீர்க்குமிழ் போன்றது. கண்ணே! நினையாத வேளையில் இறப்பு வந்து நம்மை அழைத்துச் செல்லும். அன்பு சகோதரியே! இல்லற வாழ்வில் எனக்கு சற்றும் விருப்பமில்லை. பலகோடி கன்னியரை இறக்கும்வரை கற்பு நெறிதவறாமல் காத்த மாபரன் உன்னையும் காத்திடுவார். எனவே நமது மாளிகையில் தங்கி தவம் செய்” என்று கூறினார். நடுச்சாம வேளையில் அயல்நாடு சென்று, இறைபணிசெய்ய கடும் தவம் மேற்கொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.

   தனித்திருந்து தவம் மேற்கொண்ட அலெக்சியார் உரோமை நகர் வழியாக நடந்து, வீடு வீடாய் அலைந்து பிச்சை கேட்டு உணவருந்தி வந்தார். ஒருநாள் தனது தந்தை வரும் வழியில் அவரிடம் “ஐயா! வயிறு மிகவும் பசிக்கிறது. என்மீது இரங்கி உணவு தாருங்கள்” என்று கை நீட்டினார். அவர் தனது தந்தையே என்று அலெக்சியார் தெரிந்து கொண்டார். அவரும்  காணாமல் போன தனது மகனைப்  பற்றி தவமுனிவரிடம் கூறினார். மனதில் ஏற்பட்ட வேதனையைத் தாங்கிக்கொண்டு அலெக்சியாரும் தன்னை வெளிப்படுத்தவில்லை. “அறிவும், பணபலமும் படைத்த பெரியவரே! உங்கள் மகன் தவம் சிறப்பாய் அமைய இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடக்கும்” என்றார். மேலும்“தந்தையே! அலைந்தலைந்து பிச்சை எடுத்துண்ண உடம்பில் பலமும் இல்லை. அதனால் காணாமல் போன உங்கள் மகனாக என்னை ஏற்றுக் கொண்டு தவம் புரிவதற்கான இடமும் உணவும் தருவீர்களா?” என்று கேட்டார். அலெக்சியாரின் தந்தை தனது மகன் என்று தெரியாமல் உண்ண உணவும், தவம் மேற்கொள்ள இடமும் கொடுக்க சேவகர்களுக்குக் கட்டளையிட்டார். அன்னை மரியாவை நோக்கி, “சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாளே! என் மரண நேரத்திலும் உதவி செய்தருளும்” என்று செபித்தவாறே வெள்ளிக்கிழமை அலெக்சியார் இறந்தார்.

No comments:

Post a Comment