Sunday 15 July 2018

புனித பொனவெந்தூர்

      பெரிய காரியங்களைச் செய்வதில் அல்ல, மாறாக சாதாரண காரியங்களை சிறந்த முறையில் செய்வதில்  உத்தமம் என்று கூறியவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். இறைவல்லமையால் புதுமைகள் பல செய்தவர். நற்கருணை ஆண்டவரிடம் மிகுந்த பக்தி கொண்டு இறைவனை ஆராதனை செலுத்தி அன்பு செய்தவரே புனித பொனவெந்தூர். இவர் இத்தாலி நாட்டில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். 


     பொனவெந்தூர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1248ஆம் ஆண்டு முதல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாராக பணியாற்றினர். தாழ்ச்சியின் வழியில் பயணம் செய்தார். புனித தாமஸ் அக்குவினாஸ் இவரது நெருங்கிய நண்பர். தனது 22ஆம் வயதில் புனித பிரான்சிஸ் துறவற சபையில் சேர்ந்தார். இவரது காலத்தில் சபையில் பெரிய சிக்கல் நிலவியது. சபையில் அமைதி நிலவ இரவு நேரங்களில் நற்கருணை ஆண்டவர் முன்பாக கண்விழித்து செபித்தார். தனது 36ஆம் வயதில் 1257ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சபையின் தலைவராக பொறுப்பேற்றார். புனித அசிசியார் உருவாக்கியபோது இருந்த அடிப்படை நோக்கம் சிதையாமல் 1260ஆம் சபையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்.


   ஏழ்மையும், தாழ்ச்சியும் பின்பற்றி வாழ்ந்த பொனவெந்தூர் ஏழை மக்களை அன்பு செய்தார். நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று நலமாக்கினார். தியானம், செபம், தவம், காட்சி தியானம், நற்கருணை ஆராதனை போன்றவற்றிற்காக தனது நேரங்களை செலவிட்டார். மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்தார். அன்னை மரியாவுக்கு இயேசு பிறப்பை வானதூதர் முன்னறிவித்ததை நினைவு கூறும் வகையில் மூவேளை செபம் செபிக்கப்படுகிறது. 1263ஆம் ஆண்டு மூவேளை செபம் மாலை மணி அடிக்கும் வேளையில் சபை உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னை மரியாவுக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 1274 ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment