Saturday 9 December 2017

புனித பேதுரு ஃபோரியர்


          குருத்துவ அருள்பொழிவு பெற்று உத்தம துறவியாக வாழ்ந்தவர். தன்மீது குற்றம் சுமத்தியவர் மனம் காயப்படக்கூடாது என்று நினைத்து அமைதி காத்தவர். இறையன்பின் பணியாளராக இறையாட்சி பணி செய்தவர். தன்னலம் பாராமல் தன்நலன்களை மறந்து அயலானின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவரே புனித பேதுரு ஃபோரியர். ஃபோரியர் இறைஞானம் பெற்று அறிவில் சிறந்து விளங்கினார். உலக இன்பங்களை துறந்து உத்தம துறவியாக வாழ்ந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். 
            


       தனது 24ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று சீரும் சிறப்புமாக பணியாற்றினார். இறைமக்கள் ஆன்மிக வாழ்விலும் பொருளாதார வாழ்விலும் வளர்ச்சி அடைய அயராது உழைத்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை நற்செய்தி அறிவிக்கவே செலவிட்டார். கிறிஸ்துவை அறிவிக்க தனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தார். கிறிஸ்தவ புண்ணியங்களை பின்பற்றினார். செப வாழ்வில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். செபமாலை செபிக்க அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 
         


          குழந்தைகளை அன்பு செய்தார். இலவசமாக அனைவருக்கும் கல்வி வழங்கினார். பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். இறைமக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள அயராது உழைத்தார். இரவு நேரங்களில் கண்விழித்து செபித்தார். இறைமக்களின் பாவங்களுக்காகவும் தவ ஒறுத்தல்கள் செய்தார். அருளாளர் அலிக்ஸ் லே கிளர்க் என்பவருடன் இணைந்து மீட்பரின் துறவற சபையை ஏற்படுத்தினார். இறைவனின் இரக்கத்தில் வாழ்ந்த ஃபோரியர் 1640ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1897ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.   

No comments:

Post a Comment