Monday 11 December 2017

புனித தமாசுஸ்


        திருச்சபையில் பிளவுகள் குழப்பங்கள் நிலவியத் தருணத்தில் இறைமக்கள் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க வழிகாட்டியவர். தனது உடல் உள்ளம் ஆன்மா கறைப்படாமல் என்றும் தூய்மையில் வாழ்ந்தார். தனது வாழ்வின் இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் இறையாட்சி பணிக்காக ஆர்முடன் உழைத்தவர். கிறஸ்துவின் ஏழ்மையையும், அன்னை மரியாவின் தாழ்ச்சியை தனதாக்கி கற்புநெறியில் சிறந்து வாழ்ந்தவரே புனித தமாசுஸ்.

         தமாசுஸ் உரோம் நகரில் 304ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் இறைநம்பிக்கையில் சிறந்து விளங்கினார். தலைமை திருத்தொண்டராக இறைபணி செய்தார். 367ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொலினாரிஸ் என்பவரின் தவறான கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். புனித ஜெரோம் இவரின் செயலாளராக பணியாற்றினார்.

          தமாசுஸ் வழிகாட்டுதலால் ஜெரோம் விவிலியத்தை மொழிபெயர்த்தார். இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவுக்கு நற்சான்று பகர வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டார். திருச்சபையை  வழிநடத்த அன்னை மரியாவின் துணையை ஒவ்வொரு நிமிடமும் நாடினார். அன்னையின் தாழ்ச்சியைப் பின்பற்றினார். ஏழைகள்மீது மிகுந்த அன்பு செலுத்தினார். சமூகத்தில் பின்தள்ளபப்பட்ட மக்களின் நலனுக்காக அரும்பாடுப்பட்டார்.
     
        ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். இறைமக்கள் இறைபக்தியில் நாளும் வளர வழிகாட்டினார். தனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை பாசத்துடன் மன்னித்து அன்பு செய்தார். இறைத்தந்தையும் இயேசு கிறிஸ்துவும் ஒரே இறையியல் கொண்டவர்கள் என்று கூறிய ஆரியுஸ் தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். உரோமைப் பழமைவாய்ந்த வரலாறுகளை பாதுகாக்க வரலாற்று காப்பகம் அமைத்தார். மறைசாட்சிகள் இடங்களை பாதுகாத்தார். கன்னித்தன்மை குறித்து எண்ணற்ற உரைநடை மற்றும் கவிதைகள் எழுதினார். கன்னித் தன்மையை தனது வாழ்வில் பின்பற்றிய தாமசுஸ் 384ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

No comments:

Post a Comment