Wednesday 27 December 2017

புனித யோவான்


       

          திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து, இயேசுவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக வாழ்ந்தவர். இரா உணவின்போது இயேசுவின் மார்பில் தலைசாய்த்து அவரின் இதயத்துடிப்புகளை தனதாக்கியவர். இயேசுவை கைது செய்யப்பட்டபோது எல்லா திருதூதர்களும் ஓடிவிட்டபோது இயேசுவை பின்தொடர்ந்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்தவரே புனித யோவான்.

        யோவான் என்பதற்கு கடவுளின் கொடை என்பது பொருள். இயேசுவின் சிலுவை மரணம்வரை அவரை பின்தொடர்ந்தார். இயேசு தனது அன்புத் தாய் அன்னை மரியாவை யோவானிடம் ஒப்படைத்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டு அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்தார். கோவிலின் அழகு வாயிலில் இருந்த கால் ஊனமுற்றவரை குணப்படுத்தினார். தூய ஆவியின் அருள்பொழிவு பெற்று இயேசு கிறிஸ்துவை எங்கும் அறிவித்தார்.
      இயேசுவை அறிவித்த காரணத்திற்காக பேதுரு கைது செய்யப்பட்டபோது உடன் இருந்து தைரியம் பகர்ந்தார். சமரியா, எபேசில் பகுதிகளுக்கு சென்று மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தி அறிவித்தார். 49ஆம் ஆண்டு நடைபெற்ற எருசலேம் முதல் சங்கத்தில் பங்கேற்றார். கிறிஸ்துவின் பொருட்டு புதுமைகள் பல செய்தார். இறுதியில் கொடுங்கோலன் தொமீசின் கைது செய்து உரோமைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

     கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அவரது அன்பிற்காகவே வாழ்ந்து, அன்பின் திருமுகங்கள் எழுதி, கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் போட்டார்கள். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டு இறக்காத நிலையை பார்த்தபோது அவரை பாத்மோஸ் தீவிற்கு நாடுகடத்தினர். பாத்மோஸ் தீவில் இருந்தபோது திருவெளிபாடு என்ற நூல் எழுதினார். 96ஆம் ஆண்டு நெர்வா அரசன் விடுதலை செய்தார். விடுதலை அடைந்தப் பின் எபேசில் வாழ்ந்தார். யோவான் நற்செய்தி மற்றும் மூன்று திருமுகங்கள் எழுதினார். கிறிஸ்துவுக்காக வாழ்ந்த யோவான் 100ஆம் ஆண்டு விண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து மரணம் வழியாக விண்ணக வாழ்வில் நுழைந்தார். 

No comments:

Post a Comment