Friday 15 December 2017

புனித லூசியா


        தூய்மையான உள்ளம் உடையோர் இறைவன் வாழும் ஆலயம் என்றுகூறி தூய்மைக்கு சான்றாக வாழ்ந்தவர். செல்வந்த குடுமம்பத்தில் பிறந்தவர். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவரது ஏழ்மையை பின்பற்றி அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்தவர். மறைசாட்சிகளின் வாழ்கையை கேட்டு தெரிந்துகொண்டவர். கிறிஸ்துவுக்காக எத்துன்பங்களையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித லூசியா. இவர் இத்தாலியில் சிராக்யுஸ் என்னும் இடத்தில் 283ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.

      செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வை விரும்பினார். ஏழை எளிய மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது பெரும் செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். தனது கற்பை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். இத்தருணத்தில் அவரது பெற்றோர் அவருக்கு ரிருமண ஏற்பாடு செய்தனர். லூசியா திருமணம் செய்து கொள்ள மறுத்தார். தனது இவ்வுலக வாழ்வு கிறிஸ்துவுக்கு மட்டுமே உரியது என்பதில் உறுதியுடன் இருந்தார்.
 

       லூசியாவின் விருப்பத்திற்கு மாறாக திருமண நிச்சயம் நடந்தது. இத்தருணத்தில் அவரது தாய் நோயுற்று படுக்கையானார். லூசியா தனது தாயை அழைத்துக் கொண்டு புனித ஆகத்தாம்மாள் கல்லறைக்கு சென்று வேண்டுதல் செய்தார். தாய் முழுமையாக குணம் அடைந்தார். லூசியாவின் தாய் அவரது விரும்பத்திற்கு இசைவு தெரிவித்தார். இவ்வாறு லூசியா தன் தாயின் அனுமதியுடன் தனது கற்பை கிறிஸ்துவுக்கு கையளித்தார். தனது பெரும் செல்வத்தை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்.

       லூசியாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞன் கடும் கோபம் கொண்டான். கிறிஸ்தவ மக்களை துன்புறுத்திய டயோக்கிளிசியான் என்ற பேரரசனிடம் லூசியா கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுத்தான். ஆளுநன் பஸ்காசியுஸ், லூசியாவை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினான். லூசியாவை கொலைக் களத்திற்துக் கொண்டு செல்ல காவலர்கள் லூசியாவை இழுத்தார்கள். ஆனால் லூசியா இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் இறைவன் தடுத்து நிறுத்தினார்.

காவலர்களால் லூசியாவை கொலைக் களத்திற்கு அழைத்து செல்ல இயலவில்லை. ஆளுநனின் ஆணைப்படி லூசியாவை சுற்றிலும் விறகுக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினார்கள். நெருப்பு லூசியாவை நெருங்கவில்லை. இறுதியாக 304ஆம் ஆண்டு லூசியாவை வாளுக்கு இரையாக்கினர். இவ்வாறு கிறிஸ்துவுக்காக லூசியா வீர மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment