Thursday 21 December 2017

புனித பேதுரு கனிசியுஸ்


           நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்று கூறியவர். தாயின் அன்பை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவர். கடவுளின் உதவியுடன் தனது ஒவ்வொரு செயலையும் செய்தவர். கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சிப் பணியை திறம்பட செய்தவரே புனித  பேதுரு கனிசியுஸ். இவர் டச்சு நகரான நிஜ்மெகன் நகரில் 1521ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார்.

   தாயிடமிருந்து செபம் செய்ய கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தாயின் அன்புக்காக ஏங்கியத் தருணத்தில் அன்னை மரியாவின் துணை நாடினார். மரியாவிடமிருந்து அன்பும் பாசமும்   பெற்றுக்கொண்டார். நான் குழந்தையாக இருந்தபோது என் அன்னை அழுதுக்கொண்டே கடவுளுக்கு என்னை அர்ப்பணம் செய்தார். தாயின் விருப்படியே இறைவனுக்கு என்னை முற்றிலும் அர்ப்பணம் செய்து, இறையாட்சி பணி செய்ய தன்னை தயார்செய்தார்.
        

         கனிசியுஸ் தனது 19ஆம் வயதில் ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் பட்டம் பெற்றார். இறைவன் இறையாட்சிப் பணிக்காக அழைப்பதை உணர்ந்த கனிசியுஸ் இயேசு சபையில் சேர்ந்து 1546ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1547ஆம் ஆண்டு நடைபெற்ற திரெந்து பொது சங்கத்தில் பொறுப்பேற்றார். கல்லுரியில் ஆசிரியராக பணியாற்றினார். கல்வி கற்பிப்பதிலும், சிறந்த நூல்கள் எழுதுவதிலும், மறையுறை ஆற்றுவதிலும், திறமைமிக்கவராக காணப்பட்டார். திருமறைச்சுவடி என்னும் நூலை எழுதினார்.
          

       அரசர் ஃபெர்டினான்டின் தலையீட்டினால் இறையியல் கற்பிக்க வியன்னா சென்றார். ஜெர்மனி நாடெங்கும் ஒரே குழப்பாக இருந்தது. மக்களுக்கு சிறந்த கல்விப் பயிற்சி அளித்து தீமைகள் எங்கும் பரவாமல் தடுத்தார். தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார். பல்வேறு இடங்களில் கல்லூரிகள் நிறுவினார். இறைவனில் வழியில் இறைமக்களை வழிநடத்த, நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்றுகூறி குருத்துவ கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

       கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சி பணியை சிறந்த முறையில் செய்தார். நற்கருணையை வாழ்வின் உயிர்மூச்சாக கொண்டார். நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வின் சட்டமாக ஏற்றுக்கொண்டார். தேவநற்கருணை வாங்கியப் பின் நீண்டநேரம் இயேசுவுடன் உரையாடி மகிழ்நார். சமூகத்தில் நீதி நிலவிட பாடுப்பட்டு உழைத்தார். சமூகத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். மக்களுக்காக மக்களில் ஒருவராக வாழ்ந்த பேதுரு கனிசியுஸ் 1597ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் 1925ஆம் ஆண்டு மே திங்கள் 21ஆம் நாள் புனிதர் பட்டத்தையும், மறைவல்லூநர் பட்டத்தையும் சேர்த்து வழங்கினார்.


No comments:

Post a Comment