Wednesday 13 December 2017

புனித சிலுவை யோவான்

               

      
              மனிதன் தன்னை இழந்தால் புனிதனாக முடியும். ஆம்! உலகத்துச் செல்வங்களை எல்லாம் ஒருங்கே தனதாக்கியப் பின்னும் வாழ்வில் அன்பும், அமைதியும் இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து, நிலையற்றச் செல்வங்களைத் துறந்து, அழியாச் செல்வமாகிய இறைவனின் அன்பையும், அமைதியையும், அரவணைப்பையும் தனதாக்க நம்மை அழைப்பவரே புனித சிலுவை யோவான். 

          இவர் ஸ்பெயின் நாட்டில் 1542ஆம் ஆண்டு ஜøன் திங்கள் 24ஆம் நாள் பிறந்தார். தமது 16ஆம் வயதில் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கினார். ஒய்வு நேரங்களில் மருத்துவமனைக்குச் சென்று வேலை செய்து தன் தாய்க்கு உதவினார். அன்னை மரியாவுக்குத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கி செபித்த தருணம் இறையழைத்தலை உணர்ந்தார். கார்மெல் சபையில் சேர்ந்து 1563ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவற வாழ்வைத் தொடங்கினார். 

       1567இல் குருவாக அருட்பொழிவு பெற்றார். இவர் ஆழ்ந்த இறைஞானம், தூய்மையான வாழ்க்கை, கனிவான பேச்சு, முதிர்ச்சியடைந்த உறவுகளில் சிறந்து விளங்கினார். மாணவர்கள் இறைவனின் அன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டினார். கார்மெல் சபையானது இறையனுபவத்தில் நவுற்றபோது அர்ப்பண வாழ்வில் முழுக்கவனம் செலுத்தினார். கார்மெல் சபையைப் புதுப்பிக்கத் திட்டம் வகுத்துத் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதற்குத் திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்கள் ஒப்புதல் அளித்தார். இறைவனின் அன்பும், அமைதியும் அனைவரும் பெற்றிட, தன்னலம் கருதாமல் மெய்வருத்தம் பாராமல் உழைத்த சிலுவை யோவான் 591ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14ஆம் நாள் தமது 49ஆம் வயதில் இயற்கை எய்தினார்.  1726ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ஆம் நாள் திருத்தந்தை 13ஆம் ஆசீர்வாதப்பர் புனிதர் பட்டம் வழங்கினார்.


No comments:

Post a Comment