Sunday 3 December 2017

புனித பிரான்சிஸ் சவேரியார்


        ஒரு மனிதன் இறையன்பால் உருமாற்றம் பெறும் போது அது அவரோடு நின்றுவிடாமல் பிறரது வாழ்வையும் அந்நிலைக்குக் கொண்டு வருவதே உண்மையான மனமாற்றம் என்ற  தத்துவத்தை கற்றுக்கொடுத்த மாபெரும் உத்தமர். புதிய வரலாறு படைத்தவர். நாளும் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றவர். கீழ்த்திசை நாடுகளில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, இறையன்பினால் தமது வாழ்வைக் கட்டியெழுப்பியவரே பார்போற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார். இவர் ஸ்பெயின் நாட்டில் நவரா என்னுமிடத்தில் சவேரியார் கோட்டையில் 1506ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் பிறந்தார்.

        பிரான்சிஸ் சவேரியார் பார்போற்றும் பாரிஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்குதான் புனித இலெயோலா இஞ்ஞாசியார் சவேரியாரை சந்தித்தார். சவேரியார் உலக நாட்டங்களில் மூழ்கி, ஆடம்பர வாழ்ந்தார். இஞ்ஞாசியார் இவருக்குப் பலவிதமான உதவிகளைச் செய்தார். சவேரியார் இஞ்ஞாசியாரின் உண்மையான அன்பை உணர்ந்து அவருடன் நெருங்கிப்பழகினார். இத்தருணத்தில் இலெயோலா இஞ்ஞாசியார் பிரான்சிஸ் சவேரியாரை நோக்கி, “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?”(மத் 16:26) என்ற இறைவார்த்தையைக் கூறினார். இஞ்ஞாசியாரின் அறிவுரைக்கேற்ப சவேரியார் இயேசுவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு முற்றிலும் புதிய மனிதனாக, புனிதராகவே மாறினார்.

     பிரான்சிஸ் சவேரியாரின் எண்ணங்கள், ஏக்கங்கள், கவலைகள் அனைத்தும் ஆன்மாக்களின் தாகமே.  “ஆண்டவரே எனக்கு ஆன்மாக்களைத் தாரும். மற்றவை அனைத்தையும் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளும்” என அடிக்கடி செபித்தார். ஆன்ம தாகத்தோடு பணியாற்றியதால் மக்களின் இதயங்களில் இறையாட்சி மலர்ந்தது. மக்கள் முழுநம்பிக்கையுடன் அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆலயங்களில் மக்களின் வருகை அதிகரித்து. கிறிஸ்துவை அறிவித்து இறையரசை கட்டியெழுப்பினார். தனது சிந்தனை, சொல், செயல்கள் வழியாக கிறிஸ்துவை அறிவித்தார்
           இந்தியாவிலும், கிழக்காசிய நாடுகளிலும் மக்களின் இதயத்தில் நம்பிக்கை தீபம் ஏற்றினார். பத்து ஆண்டுகளில் சிறிதும், பெரிதுமாக ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் இறைநம்பிக்கையின் தீபத்தை ஏற்ற கடல் பயணமும், கால்நடைப் பயணமும் செய்தார். இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லையென்றே சொல்லலாம். போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான ஸ்பனிருந்து கோவாவுக்கும், கோவாவிலிருந்து மலாக்காவுக்கும், அங்கிருந்து மொளுக்கஸ், டெர்னாட்டே, மோரோட்டாய் தீவுகளுக்கும், பின்னர் கோவாவிருந்து ஜப்பானுக்கும் பயணமானார்.

       பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இயேசுவின் பாதத்திற்கு அழைத்து வந்தவர் .சீனாவிற்குச் செல்லும் வாய்ப்பிற்காக சான்சியன் என்னும் தீவில் காத்திருக்கும் வேளையில் காய்ச்சனால் நோயுற்று, இயேசுவின் நாமத்தை உச்சரித்தவாறு 1552ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 2ஆம் நாள் அன்னை மரியின் கரங்களில் சாய்ந்த நிலையில் சான்சியன் தீவில் இயற்கை எய்தினார். திருத்தந்தை 15ஆம் கிரகோரி 1622ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12இல் புனிதராகவும் உயர்த்தினார். சவேரியாரின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. கோவாவில் எல்லாரும் காணக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment