Monday 5 March 2018

புனித சிலுவை யோவான்



          “மனிதன் தன்னை இழந்தால் புனிதனாக முடியும்”ஆம்! உலகத்துச் செல்வங்களை எல்லாம் ஒருங்கே தனதாக்கியப் பின்னும் வாழ்வில் அன்பும், அமைதியும் இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து, நிலையற்றச் செல்வங்களைத் துறந்து, அழியாச் செல்வமாகிய இறைவனின் அன்பையும், அமைதியையும், அரவணைப்பையும் தனதாக்க நம்மை அழைப்பவரே புனித சிலுவை யோவான். இவர் ஸ்பெயின் நாட்டில் 1542ஆம் ஆண்டு ஜøன் திங்கள் 24ஆம் நாள் பிறந்தவர். இவர் ஆழ்ந்த இறைஞானம், தூய்மையான வாழ்க்கை, கனிவான பேச்சு, முதிர்ச்சியடைந்த உறவு போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.


        யோவான் கல்வி, ஓவியம், தச்சுவேலை போன்றவற்றைத் திறம்பட கற்றுத்தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் அறிவிலும், ஞானத்திலும், அன்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். தமது 16ஆம் வயதில் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கினார். கார்மெல் சபையில் சேர்ந்து 1563ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவற வாழ்வைத் தொடங்கினார். புனித மத்தியாவின் யோவான் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.இறைவனின் அன்பும், அமைதியும் அனைவரும் பெற்றிட, தன்னலம் கருதாமல் மெய்வருத்தம் பாராமல், இரவு பகலென்று உழைத்தார்.

       மக்களுக்கு அருட்சாதனங்கள் வழியாக பரமனின் அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றுத்தந்தார். தனது அர்ப்பண வாழ்வைக் கைவிட்டால் உயர் பதவிகள், அழகிய ஆடைகள், வசதியான வீடு, சிறந்த நூலகம், தங்கச்சிலுவை இவற்றை கைமாறாகப் பெற்றுக்கொள்வாய் என்றார்கள். அதற்கு யோவான் “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவம் ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்ட, ஏழ்மையின் அரசனான கிறிஸ்துவை ஆதாயமாகக் கொண்ட எனக்கு இவ்வுலகச் செல்வம் வீணே!” என்று பதிலளித்தார்.

            ஆண்டவருக்காகத் துன்புற்று இறையரசின் மதிப்பீடுகளுக்கு சான்று பகர்ந்தார். ஏழ்மையின் அரசனான இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர். இதற்காக வசதியான அறைகளைக் கைவிட்டு, வசதியற்ற அறைகளைத் தனக்காகத் தேர்ந்தெடுத்தார். வாழ்வில் ஒப்பற்ற செல்வமாக மரச்சிலுவை, விவிலியம், மரியன்னையின் படம், செபமாலை இவற்றைத் தனிப்பெரும் சொத்தாக உரிமை கொண்டாடினார். யோவான் “அன்பு செய்வதே என் கடன். வாழ்வின் அந்திப்பொழுதில் அன்பே நம்மைத் தீர்ப்பிடும்” என்று கூறினார். திருச்சிலுவையைக் கரங்களில் எடுத்து அதை உற்று நோக்கியவாறே“ஆண்டவரே! உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கையை உமக்காகவே அர்ப்பணித்தேன். 1591ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் தமது 49ஆம் வயதில் இயற்கை எய்தினார்.


No comments:

Post a Comment