Tuesday 27 March 2018

எகிப்து நாட்டின் புனித யோவான்


          இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்து தூயவராக வாழ்ந்தவர். இறைபக்தியில் வளர அயரது உழைத்தார். நற்செயல்கள் செய்வதில் ஆர்வம் காட்டினார். பிற்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் இறையாற்றல் பெற்றவர். இறைவனின் பிரசன்னத்தில் இடைவிடாமல் வாழ்ந்து நன்மைகள் பல செய்தவரே எகிப்து நாட்டின் புனித யோவான்.

         யோவான் 300ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் பிறந்தார். தனது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பெற்று இறைபக்தியில் வளர்ந்து வந்தார். தனது 25ஆம் வயதுவரை தந்தையுடன் இணைந்து தச்சு வேலை செய்தார். இத்தருணத்தில் இறைவன் தன்னை இறையாட்சி பணி செய்ய அழைப்பதாக உணர்ந்தார். இறைவனோடு ஒன்றாக இணைந்து வேண்டுதல் செய்ய பாலைவனம் சென்று ஒரு துறவியின் வழிகாட்டுதலால் தியான வாழ்வை தொடர்ந்தார். இறைவனை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள தியாகங்கள் பல செய்தார். தமது ஆன்மா இறையருளால் நிறைய தவ முயற்சிகள் மேற்கொள்ள மலை உச்சிக்கு சென்று தியானம் செய்தார்.


         தன்னை வெறுத்து இறைவனை சொந்தமாக்கிய யோவான் 50ஆண்டுகள் இறைவனோடு இன்றிணைந்து வாழ்ந்தார். உலக இன்பங்களை துறந்து இறைவனுக்காக மட்டுமே அவரது நினைவில் வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். தேவையிலிருப்போருக்கு உதவினார். அலகையால் துன்புறுத்தப்பட்டபோது திருச்சிலுவையில் அடைக்கலம் புகுந்தார். பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை கொடுத்தார். வாரம் இருமுறை மக்களின் முகம் பார்க்காமல் ஜன்னல் வழியாக பேசினார். தனது வாழ்வின் இறுதிநாளில் உணவு, நீர் எதுவுமின்றி இறைவேண்டுதல் செய்து வாழ்ந்த யோவான் 394ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment