Friday 15 June 2018

புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக்


   
   இறைவனின் அன்பில் நிலைத்திருப்பவர்களை, எல்லா  நிந்தை அவமானங்களிலிருந்தும் அவரே நம்மை பாதுகாப்பார். என்று கூறியவர். இந்த பூமியில் துன்பப்படவே பிறந்தவரோ என்று நினைக்கக் கூடிய வகையில் துன்பங்கள், வேதனைகள், நெருக்கடிகள் மற்றும் அவமானங்களை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்தவரே புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக். இவர் பிரான்ஸ் நாட்டில் பிப்பராக் என்னும் சிற்றூரில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த திரு.லாரண்ட் குசேன், திருமதி.மேரி லாரோசி என்ற தம்பதிக்கு 1579ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறவியிலேயே சூம்பியக் கரங்களுடன் பிறந்தவர். ஸ்கராபியுலா என்னும் கழுத்து மற்றும் தாடை காசநோய்க் கட்டியால் துன்பப்பட்டார். குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தார். அவரது தந்தை அர்மேண்ட் என்ற பெண்ணை மறுமணம் செய்தார். ஜெர்மேனின் பிஞ்சு உள்ளத்தில் துயரம் விளைவிக்கும் வகையில் சிற்றன்னையின் செயல்கள் அமைந்தன

   சிற்றன்னை, ஜெர்மேனிடம் அளவு கடந்த வெறுப்பைக் காட்டினாள். ஜெர்மேனின் நோய் தன்னையும் தன் குழந்தைகளையும் பாதிக்கக் கூடும் என்று பயந்த சிற்றன்னை, அவரை வீட்டைவிட்டு வெளியே துரத்தினார். சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மேன் வீட்டின் அருகிலுள்ள மாட்டுத்தொழுவத்தில் அடைக்கலம் புகுந்தார். உண்ண உணவின்றி வாடினார். இலைகளாலான சருகுகளை மெத்தையாக்கி உறங்கினார். காய்ந்த ரொட்டித் துண்டுகளே அன்றாட உணவு. பகல் முழுவதும் ஆடு மேய்க்கும் செயலில் ஈடுபடுவார். சிற்றன்னை இவரை ஓநாய்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குச் சென்று ஆடுகளை மேய்க்கும்படி கூறுவார்

   பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் தாழ்ச்சி, பொறுமை உடையவராகக் காணப்பட்டார். தினமும் திருப்பலியில் தவறாது கலந்து கொள்வார். மறைக்கல்வி, கத்தோலிக்க விசுவாச உண்மைகளை ஆர்வத்தோடு தெரிந்து கொண்டார். ஜெர்மேன், ஆடு மேய்த்த இடம் வனப்பகுதிக்கு அருகில் இருந்தது. அங்கு கொடிய விலங்குகள் வசித்தன. ஆடுகளை மேய்க்கின்றபோது செபம் செய்வதிலும், செபமாலை சொல்வதிலும் நேரத்தைச் செலவிட்டார். ஜெர்மேன் ஆடுமேய்த்த தருணம் திருப்பலிக்கு ஆலயமணி அடித்தது. நற்கருணை ஆண்டவர் தன்னை அழைக்கின்றார். எனவே திருப்பலிக்குச் செல்ல தீர்மானித்தார். ஆடுகளைத் தனியாக விட்டுச் சென்றால் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிடும் என்று தெரிந்தும், இறைவனில் நம்பிக்கை வைத்தார். தனது தழைபறிக்கும் கொக்கிக்கோலைத் தரையில் நட்டுவைத்தார். “கீழ்ப்படிதலுள்ள ஆடுகளே! இந்தக் கோலுக்குச் சுற்றிலும் மட்டுமே நீங்கள் மேய்ந்து இளைப்பாறுங்கள்என்று கூறி நல்லாயன் இயேசுவின் கரங்களில் ஆடுகளை ஒப்படைத்துத் திருப்பலிக்கு விரைந்து சென்றார்.



  ஜெர்மேன் அன்னை மரியாளின்மீது அளவுகடந்த பாசமும், மிகுந்த பற்றுறுதியும் கொண்டார். ஆலயத்தில் மாதாவின் பீடத்தின் முன்பாக, இவர் மண்டியிட்டு பக்தி உருக்கத்துடன் செபிக்கின்ற காட்சியே கண்கொள்ளாக் காட்சியாகும். அன்னை மரியிடம் பெற்ற அன்பை தனது உடன் பிறவா சகோதர சகோதரிகளிடமும், சிறுவர் சிறுமிகளிடமும் காட்டினார். ஆதலால் சிறுபிள்ளைகள் அனைவரும் அக்கா அக்கா என்று அவளையே சுற்றி வருவார்கள். காட்டிற்குச் சென்று ஆடுகளை மேய்க்கும் போது ஆட்டுக்கோ, அவருக்கோ எந்த ஆபத்தும் நேராதபடி மரியன்னை நிழல்போல் அமர்ந்து பாதுகாத்தார். இவர் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் செபம் செய்வார். இரவில் அவருக்குத் துணையாக அன்னை மரியாவும் காவல் தூதரும் வருவார்கள். 1061ஆம் ஆண்டு øன் 15 நாள் இறந்தார்.


No comments:

Post a Comment