Monday 15 July 2019

புனித தோமினிக்

    கடவுளின் திருமுன்னால் தூய்மையாக வாழ வேண்டும். கிறிஸ்துவின் இறையாட்சி பணி மற்றும் ஒழுக்கம் ஆகியவை இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். சொந்தமாக செல்வம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது. கூடிய மட்டும் பிச்சை எடுத்தே உண்ணவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1170ஆம் ஆண்டு பிறந்தார். தோமினிக் என்றால், ‘நான் கடவுளுக்குச் சொந்தமானவன்’ என்பது பொருள். தனது 16ஆம் வயதில் புனித அகஸ்டின் துறவற சபையில் சேர்ந்தார். இறையியல் பட்டம் பெற்று இறையாட்சி பணியை ஆரம்பிதத்தார். ஊர் ஊராக சென்று இறையாட்சி அறிவித்தார். இறைமக்கள் இறைவனோடு இணைந்து வாழ செப வாழ்வை அமுதாய் ஊட்டினார். இறைவார்த்தைக்கேற்ப வாழ்ந்து, கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க இரவும் பகலும் அயராது உழைத்தார்.


     1204ஆம் ஆண்டு டென்மார்க் அரசியைக் காப்பாற்ற அரசர் எட்டாம் அல்ஃபோன்சோ என்பவர் ஓஸ்மா மறைமாவட்ட ஆயர் தியாகோ மற்றும் தோமினிக் இருவரையும் டென்மார்க்கிற்கு அனுப்பினார். அவர்கள் தென் பிரான்ஸ் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஆல்பிஜென்சிய தப்பறையைப் பின்பற்றிய மக்களைச் சந்தித்தார்.  தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட், தோமினிக்கை நியமித்தார். தோமினிக், அன்னை மரியாவிடம் பக்தி கொண்டிருந்தார். அன்னையின் துணையால் ஆல்பிஜென்சிய தப்பறையின் மீது வெற்றி பெறமுடியும் என்று நம்பினார். தோமினிக் தூலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்கு சென்று அன்னையின் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார். அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி, “நீர் போதனை செய்யும் போது, மக்கள் செபமாலை செபிக்கச் சொல்லும். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். செபமாலையின் வழியாக ஆல்பிஜென்சிய தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.  அன்னை மரியாவின் துணையோடு இறையாட்சி பணி செய்த தோமினிக் 1221ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment