Friday, 8 December 2017
அமல உற்பவ அன்னை மரியா
பெர்னதெத்தின் தனது தங்கை மேரி, அண்டை வீட்டுப் பெண் ஜோன் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை எனப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி, ஜோன் தண்ணீர் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்கத் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார்.
அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னை மரியின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. அன்னை மரியா பெர்னதெத்தை தன்னுடன் சேர்ந்த்து செபமாலை செபிக்க அழைத்தார்”. சிறிது நேரத்திற்குப் பின்னர் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார். பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டில் சென்று தன் தாயிடம் கூறினார். “அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே இருக்க விழைகின்றேன். அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய், “இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்குச் செல்லக் கூடாது”என்றார். மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்த செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள்.
பலமுறை மகிழ்ச்சியோடு காட்சியளித்த அன்னை மரியா, ஒரு நாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத், “அம்மா! ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்” என்றார். “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம் மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். மற்றொரு நாள், “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப, “பாவிகள் மனம்மாற செபமாலை செபிக்கவும், தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட சபைத் தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment