Sunday, 29 October 2017
கன்னி மரியா
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். “தூய ஆவி உன் மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மனுக்குலத்தின் சார்பாக சம்மதத்தைத் தெரிவித்தார். அத்தருணமே மரியாவின் உதரத்தில் இறைமகன் இயேசு உருவெடுத்தார். மரியாள் இப்பொழுது கன்னிகை மட்டுமல்ல தாயுமானார். மரியா முப்பொழுதும் கன்னியாவார். தூய இஞ்ஞாசியார், “மரியாவின் கன்னிமை, அவருடைய தாய்மை மற்றும் இயேசுவின் பிறப்பு ஆகிய மூன்று மறைபொருளும் இவ்வுலக அறிவுக் கண்களின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது” என்று கூறுகின்றார். அதிசயிக்கத்தக்க இந்நிகழ்வினால் முற்காலத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாகக் கடவுள் உரைத்த, “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார்”(எசா7: 14). எனும் வாக்குறுதி நிறைவேறுகிறது.
இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை. ரெய்மெண்ட் பிரௌன் எனும் விவிலிய அறிஞர், “இயேசுவின் பிறப்பு மரியாவின் கன்னித்தன்மையைக் குறைக்கவில்லை. மாறாக, புனிதப்படுத்தியிருக்கிறது” என்கிறார். மேலும் தூய அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்” என்று கூறினார். மரியா என்றும் கன்னி என்பது நமது கத்தோலிக்க விசுவாசமாகும். மரியா கன்னிமையில், இயேசுவை ஈன்றெடுத்ததைப் பற்றி புனித அகுஸ்தினார், “வியப்படையுங்கள்; ஏனெனில் ஒரு கன்னி கருவுற்றிருக்கிறார். மேலும் வியப்படையுங்கள். ஏனெனில் கன்னி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். குழந்தை ஈன்ற பின்னும் கன்னியாகவே இருக்கின்றார். என்னே வியப்பு! என்னே புதுமை! புதுமையிலும் புதுமை” என்று கூறினார். அன்னை மரியா தூதர் அறிவித்தவாறே இறைமகன் இயேசுவை இவ்வுலகில் ஈன்று அவரின் மீட்பின் பாடுகளின் இறுதி நேரம்வரை ஏன் இன்றும் விண்ணகத்தில் மூவோர் இறைவனோடு கன்னியாகவே நமக்காகப் பரிந்துரைக்கின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment