Monday, 23 October 2017
புனித லீமாரோஸ்
துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்று உணார்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்றுகூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் பிறந்தார். இவருக்கு திருமுழுக்கின் போது இட்ட பெயர் இசபெல்.
குழந்தையாக இருந்தபோது ஒருமுறை இவரது முகம், ரோஜா மலர் போல் ஒளி வீசுவதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் குழந்தையாகத் தொட்டில் கிடந்த தருணத்தில் ஓர் அழகிய ரோஜா மலர் தொட்டில் விழுவதை அவரது தாய் கண்டார். அன்று முதல் ரோஸ் என்று அழைக்கப்பட்டார். ரோஸ் பேரழகு நிறைந்த இளம்பெண். மற்றவர்களுக்குத் தன்னால் இடறல் ஏற்படாமல் இருக்க மிளகாய்த்தூள் கொண்டு தமது முகத்தில் தேய்த்து தன்னை அழகற்றவராக்கினார். தனது நீண்ட கூந்தலை வெட்டினார். தனது கன்னிமை வாக்குறுதி வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தார். தனது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். அர்ப்பணம் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தி தூயவராக வாழ்ந்து வந்தார்.
“துன்பங்கள் இறையருளோடு வரும்; இறையருள் துன்பத்தின் அளவிற்குதான் வரும். நாம் பெற்ற தூய ஆவியின் கொடையின் அளவுக்கு சோதனைகள் அதிகரிக்கும்” என்று கூறினார். தனது தியாகச் செயல்களை அதிகரித்தாôó. மாமிச உணவுகளைத் தவிர்த்தார். தன்னை கசையால் அடித்துக்கொண்டார். எழுந்து நிற்கமுடியாத நிலையிலும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகள், ஆணிகள், உடைந்த மண்பானைத் துண்டுகள் ஆகியவற்றை நிரப்பி அதில் உறங்கினார். கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை கிரீடமாகச் செய்து தலையில் அணிந்துகொண்டார். கூர்மையான ஆணிகள் குத்தி இரத்தம் வெளிவந்தது. இதையாரும் பார்க்காமல் மறைத்துக் கொள்வார்.
தினமும் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை உட்கொண்டார். பல மணிநேரம் நற்கருணை முன்பாக அமர்ந்து செபித்தார். கிறிஸ்துவின் அன்பிற்கு சான்று பகர்ந்த லீமாரோஸ் பக்கவாதத்தால் கடுமையாகத் தாக்குண்டார். அவ்வாறு ரோஸ் 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள், தனது 31ஆம் வயதில் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் கிளமண்ட் 1671ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். அமெரிக்காவின் முதல் புனிதையாக லீமாரோஸ் மாண்பு பெற்றார். இவர் தோட்டபணியாளர், மலர் விற்பனையாளர், தையல்காரர் ஆகியோரின் பாதுகாவலர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment