ஒவ்வொரு நாளும் இறைவனின் பிரசன்னத்தில் வாழ்ந்தவர். இறைவார்த்தையின் வழியாக ஆன்மாக்களை மீட்கும் பணியை ஆர்வமுடன் செய்தவர். ஒவ்வொரு திருப்பலியையும் மிகுந்த பக்தியுடன் நிறைவேற்றி, இயேசுவின் திருவுடல் மகிமையுறுவதைக் கண்டவர். மறையுரை வழியாக இறையன்பை பகிர்ந்தவரே ஸகாகுன் நகர் புனித யோவான். இவர் ஸ்பெயின் நாட்டில் ஸகாகுன் என்னும் இடத்தில் 1419ஆம் ஆண்டு பிறந்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தொடக்கக் கல்வியை கற்றார். எல்லாவற்றையும் சரியான முறையில் உண்மையின் வழியில் செய்ய ஆர்வம் கொண்டு வாழ்ந்தார்.
யோவான் இளமைப்பருவத்தில் இறையன்பில் வளர்ந்து வந்தார். பர்கோஸ் நகர் ஆயரின் கண்ணாணிப்பில் உயர்கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். இறையாட்சி பணி செய்ய ஆர்வம் கொண்டு குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1445ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று தனது பணியை ஆரம்பித்தார். இறைவனின் தூண்டுதலால் உலக இன்பங்களை துறந்தார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். ஒறுத்தல், தன்னொடுக்கம், ஏழ்மையை கடைப்பிடித்து தூய வாழ்வுக்கு தன்னை கையளித்தார்.
ஆயரின் அனுமதியுடன் சலமான்கா பல்கலைக்கழகம் சென்று நான்கு ஆண்டுகள் இறையியல் பயின்றார். சிறந்த முறையில் தனது ஆன்மீக பணிகளை செய்தார். ஏழை மக்களின் நலனுக்காக ஆவலுடன் பணியாற்றினார். நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி ஆசீர்வதித்தார். 1464ஆம் புனித அகுஸ்தினாரின் துறவு மடத்தில் சேர்ந்து கடும் தவமுயற்சிகளுடன் துறவு வாழ்வை ஆரம்பித்தார். இறைமக்களின் உள்ளங்களில் மனமாற்றம் ஏற்படுத்தும் வகையில் நற்செய்தி அறிவித்தார். இவரது மறையுரையை கேட்ட பாவிகள் மனந்திரும்பி நல் வாழ்வை ஆரம்பித்தனர். சமூகத்தில் நிலவிய தவறுகளுக்கு காரணமானவர்களைத் தயக்கமின்றி கண்டித்தார். இவர்மீது பொறாமை கொண்ட சமூக விரோதிகள் இவருக்கு விஷம் கலந்து உணவு கொடுத்தார்கள் அவ்வாறு 1479ஆம் ஆண்டு இறந்தார்.
No comments:
Post a Comment