Tuesday, 14 October 2025

இதயத்தில் அருள்சுரக்கும் இறைவார்த்தை

  

    மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமானது இதயம். அதுபோல ஆன்மா உயிர்வாழ்வதற்கு அவசியமானது இறைவார்த்தை. உலகம் உருவானதும் மனிதனுள் உயிர் மூச்சானதும் கன்னி மரியாவின் வயிற்றில் கருவானதும் இயேசு கற்பித்ததும் இறைவார்த்தையே. இறைவார்த்தை ஆன்மாவின் உணவாகவும், நம்பிக்கையின் உறுதிப்பாடாகவும், அருள்வாழ்வின் திறவுகோலாகவும், பாதைக்கு வழியாகவும், அருள்சுரக்கும் இதயமாகவும் செயல்படுகிறது.

    புனித இலாரி, “திருப்பாடல்கள் மற்றும் இறைவாக்கினர் நூல்களை வாசித்தபோது கடவுளின் ஆற்றல், வலிமை, இரக்கம் மற்றும் அவரின் அழகைக் கண்டுகொண்டேன்என்கிறார். புனித வின்சென்ட் பல்லொட்டி, “இறைவார்த்தை வாழ்க்கையின் அடித்தளம்என்கிறார்.

    குழந்தை இயேசுவின் புனித தெரசா, “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் (மத்18:3) என்னும் இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டு அன்பின் சிறிய வழியை பின்பற்றினார். எப்போதும் புன்னகையுடன் நேர்மையானவராக வாழ்ந்தார். கார்மல் துறவு சபையில் சேர்ந்து இறைவனின் அன்புக்கு தன்னை பலியாக அர்ப்பணித்தார். அருள்சுரக்கும் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து ஒரு மறைபரப்பு பணியாளராக வாழ்ந்தார். நற்செயல்கள் வழியாக ஆன்மாக்களை மீட்டு திருஅவையின் மறைவல்லுநரானார்.

    புனித பெரிய பாசில் வாழ்வு முழுவதும் இறைபணி செய்ய விரும்பினார். நற்செய்தியை ஆர்வத்துடன் வாசித்து தியானித்தார். அவரது இதயத்தில் அருள்சுரக்கும் இறைவார்த்தை செயல்பட்டது. தமது செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்து நற்செய்தி பறைசாற்றினார். செபம், தவம், உழைப்பு என்ற பன்முகத் தன்மையுடன் சமூகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தினார். இந்த வாழ்வின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் கைவிடுவதும், உலகக் காரியங்கள் மீது ஆவல் கொள்ளாதபடி ஆன்மாவை காத்துக்கொள்வதுமே வாழ்வின் நிறைவை அடைவதற்கான வழி என்பதை, நற்செய்தியை வாசித்து உணர்ந்துகொண்டேன்என்றார்.                               

No comments:

Post a Comment