Wednesday, 11 July 2018

புனித ஆசீர்வாதப்பர்

  தூய்மையான வாழ்க்கையால் இறைவனைத் தேடுதல், செபம், உழைப்பு இவற்றை தனது உயிர்மூச்சாக கருதியவர். ஞானபலன்கள் பல பெற்று இறைபணி செய்து, யாருக்கும் சுமையாகாமல் சுமைதாங்கியாக வாழ்ந்தவரே புனித ஆசீர்வாதப்பர். இவர் 480ஆம் ஆண்டு இத்தாயில் உள்ள நுர்சியா பட்டணத்தில் செல்வச் செழிப்புமிக்க, புகழ்பெற்ற அரசக் குடும்பத்தில் பிறந்தார். தியானத்திலும் பிறரன்புப் பணியிலும் சிறந்து விளங்கினார். எப்பொழுதும் சுறுசுறுப்பாக உழைக்கவும், செபிக்கவும், எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து புனித பாதையில் நடந்தார். அன்னை மரியிடம் மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவர். இவர் தனது அறையில் அன்னையின் திருச்சொரூபம் வைத்து மலர்களால் அலங்கரித்து, தீபம் ஏற்றி அன்னை மரியிடம் செபித்து வந்தார். 

   தனது 20ஆம் வயதில் உரோமையை விட்டு சுபியாக்கோவில் நீரோவின் பாழடைந்த அரண்மனைக்கு அருகில் இருந்த ஒரு குகைக்கு அமைதியைத் தேடிச் சென்றார். குகையில் இறைவனைத் தியானித்து வாழ்ந்த தருணத்தில் உரோமானுஸ் என்னும் துறவியை சந்தித்தார். அவரின் வழிகாட்டுதன்படி மூன்று ஆண்டுகள் செப, தவ முயற்சிகள் செய்து கடின வாழ்வு மேற்கொண்டாôó. பல சோதனைகளுக்கு உள்ளானார். தனது வாழ்வில் புகடமாக, ஆறுதலாக, இலட்சியமாக, ஓரே செல்வமாக வைத்திருந்த சிலுவையை உற்றுநோக்கிச் செபித்து சோதனைகளை வென்றார். தன்னைத் தேடி வந்த மக்களைச் சந்தித்தார். நோயாளிகளை குணமாக்கினார். வறுமையில் உழன்றவர்களுக்குப் பொருள் உதவியும், ஏழைகளுக்கு உணவும் வழங்கினார். மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.



   அருகிருந்த மலையில் தவவாழ்வு வாழ்ந்து வந்த துறவிகள் சிலர் தங்களுக்குத் தலைமை தாங்க வருமாறு அணுகினார்கள். இவரும் அதற்கு இசைந்தார். இவர் மிகவும் கடினமான விதிமுறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் வழங்கியதால் இவரைத் தொடர்ந்து தலைவராக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆசீர்வாதப்பருக்கு குடிநீரில் விசம் கலந்துக் கொடுத்தார்கள். அவர் சிலுவை அடையாளம் வரைந்ததும் நீர் வைக்கப்பட்டிருந்த டம்ளர் இரண்டாக உடைந்தது. எனவே ஆசீர்வாதப்பர் மீண்டும் குகைக்கே திரும்பினார்.  தனது இறப்பை ஆறு நாட்களுக்கு முன்னரே அறிவித்தார். 547 இல் மார்ச் 21ஆம் நாள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பருகியபின் ஆலயத்தில் இரண்டு கரங்களையும் விரித்து செபித்த நிலையில் உயிர்துறந்தார். 

No comments:

Post a Comment