மானிடரின் மகத்தான வாழ்வு தூய வாழ்விற்கான அழைப்பு.
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் கடவுளின் திருமுன் வாழ்வதற்கு இயேசு கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இதுவே கடவுளின் திருவுளம். கடவுளின் திருவுளம் எதுவெனத் தேர்ந்து தெளிந்து, எது நல்லது, எது
உகந்தது, எது நிறைவானது என்று
உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் அருள்வாழ்வின் வாய்க்கால் கண்டடைந்து அருள்வாழ்வு வாழ வேண்டும்.
கடவுளின் மாபெரும் கொடையான இவ்வாழ்வு வெறுமனே ரசிப்பதற்காகவோ, இன்பங்களை அனுபவிப்பதற்காகவோ மட்டும் அல்ல. மாறாக அருள்வாழ்வு வழியாக என்றும் வாழும் கடவுளுக்கு சான்று பகர்வதற்கே. அருள்வாழ்வு வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. அது மாபெரும் சவால்களை
உள்ளடக்கியது. சோதனைகளை வெல்லாமல் சாதனைகளை கைக்கொள்ள முடியாது. சிகரம் ஏறாமல் சிம்மாசனத்தில் அமர முடியாது. அதுபோல
இறை மனித உறவில் அருளில்
வளராமல் அருள்வாழ்வுக்கு சான்று பகர இயலாது.
அருளில் வளர வயது வரம்போ,
பணம் பட்டமோ, செல்வம் பதவியோ எதுவும் தேவையில்லை. மாறாக கடவுளையும், அயலானையும் அன்பு செய்யவேண்டும். இறைவார்த்தைக்கும் நற்கருணைக்கும், திருச்சிலுவைக்கும் இயேசு நாமத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும், இறைவேண்டலுக்கும் மனமாற்றத்திற்கும், இலக்குமிகு அர்ப்பண வாழ்வுக்கும், ஐம்புலன்களை வென்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை கடைப்பிடித்து அடைக்கலமருளும் அன்னை மரியாவிடம் நம்மை அர்ப்பணம் செய்யவேண்டும்.
புனித
தோமினிக் சாவியோ அன்றாட வாழ்வில் இறைவனுக்கும் இறைவார்த்தைக்கும் முதலிடம் கொடுத்தார். சிறிதோ பெரிதோ அனைத்து செயல்களையும் இறைவனின் மகிமைக்காகவும், ஆன்மாக்களின் மீட்புக்காகவும் அர்ப்பணித்தார். “பாவம் செய்வதைவிட இறப்பதே மேல்” என்று கூறி இடைவிடாமல் நற்கருணை
ஆண்டவரை ஆராதித்து அருள் பெற்றார். புனித வாழ்வு வாழும் தனது இலக்கை அன்னை
மரியாவிடம் அர்ப்பணித்து இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். “நான் இந்த உலகில்
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உலகம் முடியும்வரை என்னோடு வாழும் இயேசுவே போதுமானவர். அன்னை மரியே எனது இதயத்தை உமது
இல்லமாக மாற்றியருளும்” என்று
நாள்தோறும் செபித்து அருள்வாழ்வு வாழ்ந்தார்.
புனித
பிரான்சிஸ் அசிசி இறைவார்த்தை, நற்கருணை, திருச்சிலுவை மற்றும் அன்னை மரியா ஆகியவற்றிற்கு வாழ்வில் முதலிடம் கொடுத்தார். இதயத்தில் இறைவனின் குரல் கேட்டு மனமாற்றம் அடைந்தார். கடந்த காலத்தை கடவுளின் இரக்கத்திற்கு அர்ப்பணித்து அருள் பெற்றார். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை பின்பற்றினார். இயேசுவின் ஆன்மாக்களுக்கான தாகம் தணிக்க இடைவிடாமல் செபம், தவம், ஒறுத்தல் செய்தார். அன்னை மரியாவின் கரம் பிடித்து கிறிஸ்துவை
பின்பற்றுவதிலும், திருஅவைக்கு கீழ்ப்படிவதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். தனது உடமைகள் அனைத்தையும்
ஏழைகளுக்கு கொடுத்தார். படைப்பனைத்தையும் சகோதர சகோதரியாக நேசித்தார். ஏழ்மையை தன் காதலியென்றும், ஏழைகளை
உடன் பிறந்தோரென்றும், மரணத்தை அன்பு சகோதரியென்றும் அழைத்தார். பகைமை உள்ள இடத்தில் பாசத்தையும்,
மனவேதனை உள்ள இடத்தில் மன்னிப்பையும்,
ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும், இருள் சூழ்ந்த இடத்தில் கிறிஸ்துவின் ஒளியையும், துயரம் நிறைந்த இதயத்தில் மகிழ்ச்சியையும் விதைத்தார். இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தனது உடலில் பெற்று
இவ்வுலகின் கடைநிலை மனிதராகவும், அருள்வாழ்வின் முதல் மனிதராகவும் வாழ்ந்து இரண்டாம் கிறிஸ்துவானார்.
உலகம் பெயர், புகழ், பணம், பட்டம், பதவி ஆகியவற்றை நோக்கி
ஓடுகின்றபொழுது தந்தை கடவுளின் மாட்சியைத் தரணிக்கு தந்த இயேசு கிறிஸ்துவை
அறிந்து அனுபவித்து அருள்வாழ்வு வாழ்வோம். கடவுளின் அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்துவோம். இறை மனித உறவில்
வளர்வோம். அகிலத்தில் அமைதியை ஏற்படுத்துவோம். அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகிய இறையியல் புண்ணியங்களை
வாழ்க்குவோம். அன்னை மரியா மற்றும் புனிதர்களைப் போல நற்செய்தியின் சாட்சிகளாக
வாழ்ந்து கடவுளின் கரத்தில் அழகிய மணிமுடியாகத் திகழ்வோம்.